ஒடிசா மாநிலம் கோர்தா மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய பலூனை விழுங்கிய 6 வயது சிறுவன் உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

நிதிபூர் கிராமத்தைச் சேர்ந்த தபஸ் பைக்ரே என்ற அந்தச் சிறுவன், வீட்டில் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பாக்கெட்டிற்குள் இருந்த ஒரு சிறிய பலூனைக் கண்டுள்ளார். அதை விளையாட்டாக ஊத முயன்றபோது, பலூன் எதிர்பாராதவிதமாகச் சிறுவனின் தொண்டைக்குள் சென்று மூச்சுக்குழாயை அடைத்துக்கொண்டது. இதனால் சிறுவனுக்கு உடனடியாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனின் நிலைமை மோசமடைந்ததால், அவர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங்களில் இதுபோன்ற ஆபத்தான பொருட்களை வைக்கும் நிறுவனங்களின் அலட்சியமே இந்தப் பலிக்குக் காரணம் என உள்ளூர் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.