உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனைச் சந்திப்பதற்காகப் பெற்றோருக்கும் பாட்டிக்கும் உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குஜராத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்யும் 22 வயது இளைஞர், அந்த மாணவிக்குத் தூக்க மாத்திரைகளைத் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக, இரவு உணவில் 4 முதல் 5 மாத்திரைகளை அரைத்துக் கலந்து கொடுத்துவிட்டு, குடும்பத்தினர் மயக்கத்தில் தூங்கியதும் மாணவி ரகசியமாகத் தனது காதலன் வீட்டுக்குச் சென்று விடியற்காலையில் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

மகளின் நடத்தையில் சந்தேகமடைந்த தந்தை, ஒருநாள் இரவு உணவு சாப்பிடாமல் தூங்குவது போல் நடித்துக் கண்காணித்துள்ளார். மகள் வீட்டை விட்டு வெளியேறியதும் அவரைப் பின்தொடர்ந்து சென்று, காதலனின் வீட்டில் கையும் களவுமாகப் பிடித்தார்.

இது குறித்துப் போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தலைமறைவாக உள்ள காதலனைத் தேடி வருகின்றனர்.

மருத்துவரின் ஆலோசனை இன்றித் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை உட்கொள்வது மூளை பாதிப்பு மற்றும் கோமா நிலைக்குக் கூட இட்டுச் செல்லும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.