உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் நாரகி பகுதியில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட வாலிபரின் கொலை வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. நாரகி காவல் எல்லைக்குட்பட்ட ஜக்கை கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணறு அருகே சௌரப் என்ற வாலிபர் தலை இன்றி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், கொலையுண்ட சௌரப்பின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் சூரஜ் உள்ளிட்ட மூவரைக் கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட மனைவி தீட்டிய சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சூரஜை பிடிக்கச் சென்றபோது, அவர் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுத் தப்பிக்க முயன்றார். அப்போது நடைபெற்ற போலீஸ் என்கவுண்டரில் சூரஜ் காலில் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, துப்பாக்கி மற்றும் உயிரிழந்த சௌரப்பின் அலைபேசி ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கணவனைக் கொன்றுவிட்டு தலையை ஆழ்துளை கிணற்றில் வீசிய கொடூரச் செயலில் ஈடுபட்ட மனைவி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.