மும்பை மாநகராட்சித் தேர்தல் பிரசாரத்தில், “மும்பை ஒரு சர்வதேச நகரம்” எனத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது, மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராஜ் தாக்கரே தமிழர்களைக் கடுமையாக விமர்சிக்க, அண்ணாமலையோ அவருக்கு நேரடி சவால் விடுத்துள்ளார்.

மும்பை மாநகராட்சித் தேர்தல் வரும் ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் அல்ல; அது ஒரு சர்வதேச நகரம்” என்று குறிப்பிட்டார்.

மராட்டிய மண்ணின் மைந்தர்கள் உரிமை பேசும் கட்சிகளுக்கு இந்தப் பேச்சு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மும்பையின் வளர்ச்சி மராட்டியர்களால் மட்டுமே சாத்தியமானது என்ற கருத்தைக் கொண்டுள்ள சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா ஆகிய கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரசாரத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியதாவது: “தமிழ்நாட்டில் இருந்து வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? இதனால்தான் உங்களை (தமிழர்களை) அன்று பால்தாக்கரே விரட்டியடித்தார். இதுவரை வட இந்தியர்களுக்கு எதிராகப் பேசி வந்தோம், இப்போது தென்னிந்தியர்களுக்கும் எதிராகப் பேச வேண்டியுள்ளது,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

ராஜ் தாக்கரேவின் விமர்சனம் மற்றும் சிவசேனா பத்திரிகையில் வந்த மிரட்டல்களுக்கு அண்ணாமலை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: “நான் மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், என் மீது ‘மை’ (Ink) ஊற்றுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். நான் இதோ மும்பைக்கு வந்துவிட்டேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள்; என் மீது மை அடித்துப் பாருங்கள். இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.

மும்பை உலகத்தின் தலைநகர் என்று நான் சொல்லும்போது, அது மராட்டியர்களால் கட்டப்பட்ட நகரம் இல்லை என்று அர்த்தமாகிவிடுமா? மும்பை ஒரு சர்வதேச நகரம் என்பதுதான் நிதர்சனம்,” என்று அதிரடியாகப் பேசினார். மேலும் மும்பை மாநகராட்சித் தேர்தல் நெருங்கும் வேளையில், மொழி மற்றும் இன உணர்வைத் தூண்டும் வகையிலான இந்தப் போட்டிப் பேச்சுகள் மும்பை வாழ் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.