20 ஆண்டுகளுக்கு முன்பு ஜாகீர் கானுக்காக என்ற பதாகையை ஏந்திய ரசிகை, தற்போது மீண்டும் அதே வாசகத்துடன் வதோதராவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் தென்பட்டுள்ளார்.

2005-ஆம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போது, அந்த இளம் பெண் ஜாகீர் கானுக்கு தனது காதலை வெளிப்படுத்தியது அன்றைய காலகட்டத்தில் பெரும் வைரலாக பேசப்பட்டது. தற்போது இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, அதே ஆர்வத்துடன் அவர் மீண்டும் அதே பதாகையை ஏந்தி வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பழைய நினைவுகளைத் தூண்டியுள்ளது.

சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. அன்றைய போட்டியில் ஜாகீர் கான் மைதானத்தில் இருந்தபோது சக வீரர்களின் கேலிக்கு மத்தியில் வெட்கத்துடன் சிரித்த அந்த தருணத்தை ரசிகர்கள் இப்போதும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

மேலும் காலங்கள் மாறினாலும் கிரிக்கெட் மீதான காதலும், தங்களுக்குப் பிடித்தமான வீரர்கள் மீதான அபிமானமும் குறையவே இல்லை என்பதற்கு இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே துடிப்புடன் வந்துள்ள அந்த ரசிகையின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.