பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களைக் கொண்டு மீன் சமைக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பானாபூர் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்களுக்குப் பிடித்த மீன் உணவை மாணவர்களை விட்டுச் சமைக்கச் செய்ததுடன், பாத்திரங்களையும் கழுவ வைத்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு மீன் விருந்து உண்பதிலேயே குறியாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்துப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதியின் வட்டாரத் தலைவர் தாரிக் அன்வர் பள்ளிக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார். அப்போது அங்கிருந்த பங்கஜ் குமார் என்ற ஆசிரியர், அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

“>

 

மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, அவர்களை வேலைக்காரர்களைப் போலச் சமைக்க வைத்தது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கல்வித் துறை அதிகாரிகள் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.