ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ஊழியர் நாகராஜி, தனது மனைவியின் கள்ளக்காதலால் நண்பர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜியின் நண்பரான வசந்த ராவ், நாகராஜியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது அவரது மனைவி ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இந்த விஷயம் நாகராஜிக்குத் தெரியவந்து அவர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த ரம்யா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதற்காக வசந்த ராவிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் ரம்யா கொடுத்துள்ளார்.

கொலைத் திட்டத்தின்படி, வசந்த ராவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டி எனக் கூறி நாகராஜியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அதிக அளவு மது கொடுத்து, அவர் போதையில் இருந்தபோது தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சு திணறடித்துக் கொலை செய்தனர்.

பின்னர், அவரது உடலை பைக்கில் கட்டி எடுத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசினர். எதற்கும் தெரியாதது போல ரம்யா காவல் நிலையம் சென்று, தனது கணவர் காணவில்லை என்றும் அவர் போதைக்கு அடிமையாகி நகைகளை எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் புகார் அளித்துள்ளார்.

ஆனால், ரம்யாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. நாகராஜி இறந்த சில நாட்களிலேயே ரம்யாவும் வசந்த ராவும் தனியாக வீடு எடுத்துத் தங்கியது போலீசாரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ரம்யா, வசந்த ராவ் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சிக்கினர். ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்ததால் சபரிமலை சென்று வந்த பிறகு இந்தக் கொலையைச் செய்ததாக வசந்த ராவ் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.