மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் டப்ரா அருகே உள்ள கேடா கிராமத்தில், கோவில் பூசாரி ஒருவர் இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 65 வயதான ஹரிராம் என்ற அந்தப் பூசாரி, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது வாயில் துணியைத் திணித்துக் கொடூரமான முறையில் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் பூசாரியைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், மகளிர் காவல் நிலையத்தில் பூசாரி ஹரிராம் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம மக்கள் பிடியில் இருந்த பூசாரி, அங்கிருந்து தப்பியோடித் தற்போது தலைமறைவாக உள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக அதே கிராமத்தில் உள்ள கோவிலில் தங்கியிருந்த பூசாரி, இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளியைத் தேடிப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.