உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன சோனியா என்ற பெண்ணின் கொலையை முராத்நகர் போலீசார் அதிரடியாகத் தீர்த்து வைத்துள்ளனர்.

சோனியாவின் மகள், தனது தாயின் கொலையை நேரில் பார்த்ததை தனது உறவினர்களிடம் கூறியதன் அடிப்படையில் இந்தத் திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது. அதன் பிறகு, சோனியாவின் கணவர் பர்விந்தர் மற்றும் அவனது உடந்தையாளர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொடூரமான கொலைத் திட்டம் அம்பலமானது.

சோனியாவை மின்விசிறியில் தூக்கிலிட்டுக் கொல்ல முயன்றபோது அவர் உயிர் பிழைத்ததால், கணவன் பர்விந்தர் தலையணையால் அவர் மூச்சை அடைத்துக் கொன்றுள்ளான். பின்னர் உடலை ஒரு படுக்கையில் மறைத்து, முசாபர்நகருக்குக் கொண்டு சென்று எரித்து, அதன் சாம்பலைக் குளத்தில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றவாளிகள் கொடுத்த தகவலின்படி, அந்தக் குளத்திலிருந்து சோனியாவின் உடல் பாகங்களை போலீசார் மீட்டுள்ளனர். கணவன் மற்றும் அவனது உறவினர்கள் மேற்கொண்ட இந்தத் திட்டமிட்ட படுகொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.