தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் உடோம்சாப் முயாங்கேவ் என்ற 38 வயது ஜோதிடர், 19 வயது இளம் பெண்ணான பிம் என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பெண்ணிடம், அவருக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.

இந்தத் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்கப் பணம் கொடுத்து ஒரு சடங்கு செய்ய வேண்டும் என அவர் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பெண் சடங்கு செய்ய மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

சிறிது நேரத்திலேயே தனது ஐபோன் காணாமல் போனதை உணர்ந்த அந்தப் பெண், மீண்டும் ஜோதிடரிடமே சென்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், தனது கணிப்பு உண்மையாகிவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண் போலீசாரிடம் புகார் அளித்தார்.

போலீசார் சோதனையிட்டபோது, ஜோதிடரின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐபோனை மீட்டனர். தனது ஜோதிடம் பலித்ததாக நம்ப வைக்கவே அந்தப் பெண்ணின் செல்போனைத் தான் திருடியதாக அவர் ஒப்புக்கொண்டார்.