பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு, ஒரு மாணவர் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த கணித ஆசிரியைக்கு, வாழ்நாள் முழுவதும் கற்பித்தல் பணியில் ஈடுபட இங்கிலாந்து கல்வித்துறை தடை விதித்துள்ளது.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்தவர் ரெபேக்கா ஜாய்ன்ஸ் (31). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு, தான் பாடம் எடுக்கும் வகுப்பில் பயிலும் 16 வயதுக்குட்பட்ட இரண்டு மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாகப் புகார் எழுந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம், அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தது. தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ரெபேக்காவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற விசாரணையின் போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அந்த இரண்டு மாணவர்களையும் ரெபேக்கா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும், அதில் ஒரு சிறுவன் மூலம் அவர் கர்ப்பமடைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததும் மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியையின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் எனக் கூறி, கடந்த 2024-ஆம் ஆண்டு அவருக்கு 6½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
தற்போது ரெபேக்கா சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், இங்கிலாந்து கல்வித்துறை அவர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, ரெபேக்கா ஜாய்ன்ஸ் இனி வாழ்நாள் முழுவதும் இங்கிலாந்தில் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் ஆசிரியையாகப் பணியாற்ற முடியாது எனத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் “ஆசிரியர் பணி என்பது புனிதமானது; மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எவரும் இப்பணியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள்” என இங்கிலாந்து கல்வி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
