ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற புண்ணியத் தலமான ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில் வளாகத்தில், சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடி வீடியோ வெளியிட்ட 5 ஊழியர்களைத் தேவஸ்தான நிர்வாகம் அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது.
ஸ்ரீசைலம் கோயிலுடன் இணைந்த ‘மல்லிகார்ஜுன அன்னசத்ரா’ என்ற இலவச உணவு வழங்கும் மையம் கோயில் வளாகத்திலேயே இயங்கி வருகிறது. கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தின்போது, இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிலர், புனிதமான அந்த வளாகத்தின் மாண்பைச் சிதைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளனர். அங்கிருந்த ஊழியர்கள், சினிமா பாடல்கள் மற்றும் ‘ஐட்டம்’ பாடல்களுக்கு அநாகரீகமான முறையில் நடனமாடியுள்ளனர்.
📹 Srisailam | Temple Controversy
Dance videos filmed to movie songs at Mallikarjuna Sathram have sparked outrage among devotees.
Calls for strict action to prevent such incidents in the future.#Srisailam #AndhraPradesh #APNews pic.twitter.com/tee3QdP7Kw
— Rathnam News (@RathnamNews) January 4, 2026
இந்தச் செயலை அவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிரவே, அது காட்டுத்தீயாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புண்ணியத் தலத்தில் இத்தகைய செயல்கள் அரங்கேறியது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கோயிலின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பாபு அளித்த புகாரின் பேரில், ஆந்திர காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 5 ஊழியர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோயில் விதிமுறைகள் மற்றும் அறநிலையத்துறை சட்டங்களை மீறியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீசைலம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் ராவ் கூறுகையில்: “கோவில் மற்றும் அதனைச் சார்ந்த வளாகங்களுக்குள் நடனமாடுவதோ அல்லது ‘ரீல்ஸ்’ (Reels) எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. புனிதமான தலம் என்பதை உணராமல் அநாகரீகமாகச் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.
மேலும்,, “ஊழியர்களின் இந்தச் செயல் பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட 5 ஊழியர்களும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்,” என உறுதிப்படுத்தினார். கோயில் புனிதத்தைக் காக்கத் தவறிய ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மற்ற ஊழியர்களிடையே ஒரு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
