லண்டன் மாநகர பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்கள் அத்துமீறல்களுக்கு உள்ளாக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோ தொகுப்பில், ரயிலில் பயணிக்கும் இரண்டு பெண்களைச் சுற்றி இருப்பவர்கள் அநாகரீகமாகப் பார்ப்பதும், அவர்களது உடையைக் கேலி செய்வதும் இடம்பெற்றுள்ளது. ஒரு கட்டத்தில், நபர் ஒருவர் அப்பெண்களுக்குக் கட்டாய முத்தம் கொடுக்க முயல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சுமார் 13 லட்சம் பேருக்கும் மேலாகப் பார்த்துள்ள இந்த வீடியோ, லண்டன் மக்களின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இணையவாசிகள் இடையே காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. சட்டவிரோதக் குடியேறிகளே இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். “லண்டன் வீழ்ச்சியடைந்துவிட்டது” என்று அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால், “பாலியல் தொல்லை என்பது மனநலம் சார்ந்த பிரச்சனையோ தவிர, கடவுச்சீட்டு சம்பந்தப்பட்டது அல்ல” என்று மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
The current horrific situation of harassment against women in London.
Every day, undocumented illegal immigrants arrive in London. pic.twitter.com/DDnEVbTrbm
— Squint Neon (@TheSquind) January 4, 2026
அந்த வீடியோவில் உள்ள சில காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டவை அல்ல என்றும், அவை நியூயார்க் சுரங்கப்பாதையில் எடுக்கப்பட்டவை என்றும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், பெண்கள் தங்களை வீடியோ எடுப்பதைப் பார்த்தே பயணிகள் அவர்களைத் திரும்பிப் பார்ப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
லண்டன் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, லண்டன் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து வருகின்றன. கடந்த 2023 பிப்ரவரி முதல் 2024 ஜனவரி வரை சுமார் 2,671 பாலியல் புகார்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, லண்டன் சுரங்கப்பாதைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘பெண்களுக்குத் தனிப் பெட்டி’ ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது தொடர்பாக லண்டன் பல்கலைக்கழக மாணவி காமில் பிரவுன் என்பவர் கடந்த 2025 அக்டோபரில் ஆன்லைன் மூலம் ஒரு மனுவைத் தொடங்கினார். லண்டன் மேயர் சாதிக் கான் மற்றும் போக்குவரத்துத் துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அந்த மனுவில், இதுவரை 14,000-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
