திருத்தணி இரயில் நிலையம் அருகே கஞ்சா போதையில் இருந்த சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, குற்றங்களைத் தடுக்கவும் தவறிவிட்டது, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் தவறிவிட்டது என்பதற்கு இதுவே சான்று என்று அவர் விமர்சித்துள்ளார். அந்த இளைஞர் தானாக மாயமானாரா அல்லது அரசியல் காரணங்களுக்காக ஏதேனும் சதி நடந்துள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர்கள் வடமாநிலத்தவர் மீது தொடர்ந்து வெறுப்பை வெளிப்படுத்தி வருவதாகவும், அதற்குத் தமிழகக் காவல்துறை துணை போவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பதை முதலமைச்சர் உடனடியாக மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த அலட்சியத்தால் தேசிய அளவில் தமிழகத்திற்குப் பெரும் அவப்பெயர் ஏற்படும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
