71 வயதான உலகப்புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான், தனது புதிய படமான ‘Unexpected Family’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காசா குழந்தைகளின் துயரம் குறித்து உருக்கமாகப் பேசினார். அண்மையில் அவர் பார்த்த ஒரு வீடியோவில், பெரியவனானதும் என்னவாகப் போகிறாய் என்று கேட்கப்பட்ட ஒரு பாலஸ்தீன சிறுவன், “எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை, அதற்கு முன்பே கொல்லப்பட்டு விடுகிறோம்” என்று எவ்வித உணர்ச்சியுமின்றி பதிலளித்ததைக் கண்டு தான் நிலைகுலைந்து போனதாகத் தெரிவித்தார்.

மரணத்திற்குப் பழகிப்போன அந்தச் சிறுவனின் வார்த்தைகளைக் கேட்டதும் தன் கண்கள் குளமாகிவிட்டதாகவும், முதுமையை ஒரு சுமையாக நினைக்கும் உலகில் பல கோடி குழந்தைகளுக்கு அந்த முதுமையே மறுக்கப்படுவது வேதனையளிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 23 மாதங்களாகத் தொடர்ந்து வரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 20,000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அங்கு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படும் அவலம் நீடிக்கிறது.

ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் வன்முறை எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால் அவர்களால் மரணத்தைப் பற்றி இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்ற ஜாக்கி சானின் கேள்வி, போரினால் சிதைக்கப்படும் பிஞ்சுயிர்களின் வலியை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.