“பாலஸ்தீனக் குழந்தைகள் வளர்வதற்கு முன்பே போரினால் சிதைக்கப்படுகிறார்கள்” என்று உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலை நடிகர் ஜாக்கி சான் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
ஜாக்கி சான் (71) நடித்துள்ள ‘அன்எக்ஸ்பெக்டட் ஃபேமிலி’ (Unexpected Family) என்ற புதிய திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜாக்கி சான், காசா போரின் கோர முகத்தை விவரிக்கும் ஒரு வீடியோவைப் பார்த்தபோது தான் அடைந்த மனவேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் ஜாக்கி சான் பேசியதாவது: “அண்மையில் காசா குழந்தைகளின் துயரங்களை விவரிக்கும் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு சிறுவனிடம், ‘பெரியவனானதும் நீ என்னவாகப் போகிறாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தச் சிறுவன் எவ்வித உணர்ச்சியுமின்றி, மிகச் சாதாரணமாக, ‘எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை; ஏனெனில் வளர்வதற்கு முன்பே நாங்கள் கொல்லப்பட்டு விடுகிறோம்’ என்று பதிலளித்தான்.

 

அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றாகிவிட்டன. மரணத்திற்குப் பழகிப்போன அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்க்கும்போது என்னால் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாம் முதுமையை ஒரு சுமையாக நினைக்கிறோம். ஆனால், கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த முதுமையடையும் பாக்கியம் மறுக்கப்படுகிறது.”

வன்முறை என்பது ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால், மரணத்தைப் பற்றி அந்தச் சிறுவனால் இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்பதே உலகம் உணர வேண்டிய செய்தி என்றும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, இதுவரை 20,000 குழந்தைகள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது, கடந்த 23 மாதங்களில் காசாவில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தை வீதம் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.