சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நள்ளிரவு 1 மணியுடன் கொண்டாட்டங்களை முடித்துக் கொள்ள வேண்டும் எனப் பெருநகர காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2026-ஆம் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு, சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதேபோல், நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் (Resorts) புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காக்கும் வகையில், காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஓட்டல்கள் மற்றும் பொது இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியுடன் கட்டாயம் முடித்துக் கொள்ள வேண்டும்.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப் பரிந்துரைக்கப்படும். போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்க முக்கியச் சந்திப்புகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தடையின்றிப் புத்தாண்டு கொண்டாட ஏதுவாகப் பொதுமக்கள் காவல்துறையின் விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனப் பெருநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சாலைகளில் பைக் ரேஸில் ஈடுபடக்கூடாது எனவும் பட்டாசு வெடிக்க கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்திய நிலையில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மது அருந்தும் இடங்களில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
