இந்திய கிரிக்கெட் உலகின் ‘அதிவேக புயல்’ என்று வர்ணிக்கப்படும் 15 வயது இளம் லெஜண்ட் வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக சாதனை படைத்து ஒட்டுமொத்த உலகையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

மேலும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு மகுடம் சூட்டிய இந்த ‘வண்டர் பாய்’, இந்த வரலாற்று வெற்றியை அப்படியே தனது தந்தைக்கு அர்ப்பணித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “தந்தையர் தினத்தில் இந்த உலக சாதனை வெற்றியை எனது அப்பாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என அவர் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி, பார்ப்போரை ஆனந்தக் கண்ணீரில் மூழ்கடித்து வருகிறது.

இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷியின் கண்ணீர் கதையும், தியாகமும் தான் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. தன் மகனின் கிரிக்கெட் கனவுக்காக தனது சொந்த நிலத்தையே விற்று, கொளுத்தும் வெயிலிலும், பெருமழையிலும், கொரோனா லாக்டவுன் காலத்திலும் ஒரு நாள் கூட பயிற்சியை நிறுத்தாமல் வைபவை செதுக்கியுள்ளார் அந்த தந்தை.

இந்நிலையில் “அப்பா எனக்கு கற்றுக்கொடுத்த ஒழுக்கமும், தனிநபர் சாதனையை விட அணியின் வெற்றியே முக்கியம் என்ற தாரக மந்திரமும் தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது” என வைபவ் உருகியுள்ளார். கோடி ரூபாய் ஐபிஎல் ஒப்பந்தம், உலக சாதனைகள் என அத்தனையும் தாண்டி, ஒரு தந்தை தன் மகனுக்காக சிந்திய வியர்வைக்கு கிடைத்த இந்த அசாத்திய வெற்றியை நெட்டிசன்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.