அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டலைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வந்த மிக முக்கியமான இருதரப்பு பேச்சுவார்த்தை பாதியிலேயே முறிவடைந்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் மற்றும் ஈரான் தூதுக்குழு இடையே ஏற்கனவே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த சமயத்தில் அதிபர் டிரம்ப், “ஈரான் தனது நிழல் யுத்தத்தை நிறுத்த வேண்டும், ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களைத் தடுக்க வேண்டும்; அமெரிக்காவின் பேச்சைக் கேட்காவிட்டால் ஈரான் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என ஆக்ரோஷமாக மிரட்டல் விடுத்தார். டிரம்பின் இந்த அதிரடி பேச்சால் ஆத்திரமடைந்த ஈரானின் முதன்மை தூதர்கள், பேச்சுவார்த்தை அறையை விட்டு உடனடியாக வெளியேறி கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

அமெரிக்காவின் இந்த வெற்று மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்றும், தங்களது ராணுவம் உடனடியாக பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாகவும் ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும் முதன்மை தூதருமான முகமது பாகேரி காலிபாஃப் எக்ஸ் (X) தளத்தில், “அமெரிக்கா முதலில் தன்னைப்பற்றி யோசிக்கட்டும்; அவர்களின் மிரட்டலால் ஏதேனும் பயன் இருந்திருந்தால், டிரம்ப் இன்று இந்த அளவிற்கு விரக்தியடைந்திருக்க மாட்டார்.

டிரம்ப் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும், எங்களது ஆயுதப்படை முற்றிலும் வேறு வழியில் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என சவால் விடுத்துள்ளார். மேலும், இஸ்ரேல் நாடு லெபனான் மீதான போரையும் தாக்குதல்களையும் முழுமையாக நிறுத்தும் வரை, அமெரிக்காவுடன் இனி எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இந்த சர்வதேச மோதலால் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.