பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையே புகைப்படம் எடுத்துக் கொள்வது தொடர்பாக வெடித்துள்ள வார்த்தை போர் உலகளவில் பெரும் மோதலாக மாறியுள்ளது. இத்தாலியத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ஜி-7 மாநாட்டின் போது இத்தாலி பிரதமர் மெலோனி தம்மோடு புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகத் தம்மிடம் “கெஞ்சியதாகக்” கூறி அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இத்தாலியில் மெலோனியின் மக்கள் செல்வாக்கு சரிந்து வருவதாகவும், ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இத்தாலி ஆதரவு அளிக்காததே இதற்குக் காரணம் என்றும் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான சுமுகமான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த சர்ச்சை பேச்சுக்குத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இத்தாலி பிரதமர் மெலோனி மிகவும் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். டிரம்பின் கூற்றுக்கள் அனைத்தும் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்ட பொய்கள் என்று சாடிய அவர், “நானோ அல்லது இத்தாலி நாடோ யாரிடமும் எப்போதும் கெஞ்சுவதில்லை” என்று மிக ஆக்ரோஷமாகப் பதிவிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளின் உண்மையான நட்பு நாடுகளைவிட, அவர்களின் எதிரி நாடுகளின் தலைவர்களிடமே டிரம்ப் அதிக மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டிய மெலோனி, “என்னுடைய மக்கள் செல்வாக்கைப் பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் தேவையில்லை; முதலில் உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள்” என்று மிக நேரடியாகத் தெரிவித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களின் இந்தத் தொடர் மோதல் போக்கு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.
