இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பசிதான் பகுதியில் கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற ஒரு வினோத திருமணம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 74 வயதான தர்மான் என்ற முதியவர், 24 வயதான ஷேலா அரிகா என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் 50 வயது வித்தியாசத்தை விடவும், திருமணத்தின் போது மணமகன் தர்மான் மணமகளுக்கு பரிசு தொகையாக 3 பில்லியன் இந்தோனேசிய ருபியா (இந்திய மதிப்பில் சுமார் 1.8 முதல் 2 கோடி ரூபாய்) மதிப்பிலான காசோலையை பொதுமக்களுக்கு முன்பாக வழங்கியதுதான் ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இவர்களின் ஆடம்பரத் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, “உண்மையான காதல்” என்று பலரால் பாராட்டப்பட்டது. ஆனால், அந்த மகிழ்ச்சி சில நாட்களிலேயே தலைகீழாக மாறியது. திருமணத்திற்குப் பின் புகைப்படக் கலைஞர்களுக்குப் பணம் தராமல் இந்தத் தம்பதி தலைமறைவானதைத் தொடர்ந்து, அந்த 2 கோடி ரூபாய் காசோலை போலியானது என்ற வதந்தி இணையத்தில் பரவத் தொடங்கியது.
ஆரம்பத்தில் இந்த வதந்திகளைப் பெண்ணின் குடும்பத்தினர் மறுத்தபோதிலும், போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அம்பலமாகின. மணமகன் தர்மான் ஏற்கனவே 2022-ல் ஒரு மோசடி வழக்கில் சிக்கி 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, திருமணத்திற்காக அவர் கொடுத்த 3 பில்லியன் ருபியா காசோலை முற்றிலும் போலியானது என்பதை உறுதி செய்த போலீஸார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். அந்தப் பெண்ணை ஏமாற்றி, ஆசை வார்த்தை கூறித் திருமணம் செய்வதற்காகவே இந்த போலி காசோலையைத் தான் பயன்படுத்தியதாக தர்மான் போலீசில் ஒப்புக்கொண்டார்.
இந்த ஏமாற்று வேலைக்காக அவருக்கு 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், விசித்திரமாக அவரது 24 வயது இளம் மனைவி ஷேலா, “நான் என் கணவரை நேசிக்கிறேன், அவர் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை” என்று கூறி இன்னமும் அவருக்கு ஆதரவாக நிற்கிறார். இந்த போலி காசோலை மற்றும் வயது வித்தியாசத் திருமணம், உலகளவில் பணத்திற்காக நடக்கும் திருமணங்கள் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
