சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், ‘டூத்சி’ செயலி மூலம் அண்ணா நகரில் உள்ள ஒரு பல் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின்போது, மருத்துவர் சூசை கிறிஸ்டோபர் என்பவர் பாதிக்கப்பட்ட பற்களுக்குப் பதிலாக, நன்றாக இருந்த பற்களைத் தவறுதலாகப் பிடுங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் காயத்ரிக்குக் கடும் வலி, ரத்தப்போக்கு மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவ அலட்சியத்திற்காக ரூ.75 லட்சம் இழப்பீடு கோரி அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை நுகர்வோர் நீதிமன்றம், மருத்துவ அலட்சியம் நடந்திருப்பதை உறுதி செய்தது. இதற்கு மருத்துவர் மட்டுமே முழு பொறுப்பு என்று தெரிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 5,000 ரூபாயும் வழங்க மருத்துவர் சூசை கிறிஸ்டோபருக்கு உத்தரவிட்டனர்.

தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ள இந்தச் சம்பவம் தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.