வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியா (80), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 30) அதிகாலை காலமானார். கடந்த நவம்பர் 23-ம் தேதி முதல் டாக்கா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வங்கதேச அரசியலில் மிக முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த இவரது மறைவு, அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது 80-வது வயதில் மறைந்த கலிதா ஜியா, வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர். பல தசாப்தங்களாக அந்நாட்டின் அரசியலைத் தீர்மானித்த ஒரு வலிமையான தலைவராக அவர் விளங்கி வந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
