திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்தால் ‘சங்கிகள்’ அடுத்த பத்து நாட்களுக்குத் தூங்கவே முடியாது என்று அதிரடியாகத் தொடங்கினார்.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, முதல்வர் ஸ்டாலினின் மொழிப்பற்றைப் பாராட்டிப் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டின் குரல் இன்று காஷ்மீர் வரை எதிரொலிப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முதல் இன்றைய விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வரை திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்காகச் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.

பீகாருக்குப் பிறகு தமிழ்நாடுதான் இலக்கு என்று அமித் ஷா கூறியதற்குப் பதிலடி கொடுத்த உதயநிதி, சுயமரியாதை மிக்க பெண்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாசிசம் எடுபடாது என்றும், டெல்லிக்குத் தமிழ்நாடு எப்போதுமே ‘அவுட் ஆஃப் கண்ட்ரோல்’ தான் என்றும் ஆவேசமாகப் பேசினார்.

திமுக தேர்தல் அறிக்கையை அதிமுகவினர் ‘காப்பி-பேஸ்ட்’ செய்யக் காத்திருப்பதாக விமர்சித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பெண்களுக்கு இன்னும் கூடுதல் திட்டங்கள் வரும் என்று கூறி, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.