திருப்பூர் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பையும் கனிமொழியிடமே ஒப்படைப்பதாக அறிவித்தார்.
லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த எழுச்சிமிகு மாநாடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டதாக அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் பேசிய முதல்வர், பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டுப் பெண்கள் ஐபோன் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
பெரியாரின் கொள்கைப்படி பெண்களின் முன்னேற்றமே ஆண்களின் சுமையைக் குறைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், விடியல் பயணத் திட்டம் மற்றும் உள்ளாட்சித் துறை இட ஒதுக்கீடு போன்றவற்றால் பெண்கள் அதிகாரமிக்கவர்களாக மாறியுள்ளதாகக் கூறினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாடு, பெண்களுக்கான அரணாக திமுக அரசு திகழ்வதை மீண்டும் பறைசாற்றியது.
