உத்தரப்பிரதேச மாநிலம் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான ஓம்பிரகாஷ் சிங் ரத்தோர் மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகள் ரஷ்மி ஆகியோர், தங்களை கவனித்துக்கொள்ள வந்த வேலைக்கார தம்பதியினரால் 5 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2016-ல் மனைவி இறந்த பிறகு, ஓம்பிரகாஷ் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அவர்களைப் பராமரிக்க ராம் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி ராம்தேவி ஆகியோர் பணியமர்த்தப்பட்டனர். ஆனால், அந்தத் தம்பதியினர் வீட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, தந்தை-மகள் இருவரையும் ஒரு இருட்டு அறைக்குள் அடைத்து வைத்து, அடிப்படை வசதிகள் மற்றும் உணவின்றி வாட்டியுள்ளனர்.
உறவினர்கள் பார்க்க வந்தாலும் பல்வேறு காரணங்களைச் சொல்லி அந்த வேலைக்கார தம்பதி திருப்பி அனுப்பியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை ஓம்பிரகாஷ் இறந்துவிட்டதாகத் தகவல் கிடைத்து உறவினர்கள் அங்கு சென்றபோது, வீடு ரத்தக் கறைகளுடனும் எலும்புக்கூடாக மாறிய உடல்களுடனும் காட்சியளித்துள்ளது.
ஓம்பிரகாஷின் உடல் சதைப்பற்று இன்றி மெலிந்து போயிருந்ததுடன், அவரது மகள் ரஷ்மி ஆடையின்றி, பட்டினியால் 80 வயது மூதாட்டியைப் போல உருக்குலைந்து காணப்பட்டார். ஒருகாலத்தில் கோட் சூட் அணிந்து கம்பீரமாக வாழ்ந்த ரயில்வே ஊழியர், இப்படிப் பரிதாபமாக உயிரிழந்தது அக்கம் பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது உயிருக்குப் போராடும் ரஷ்மியை மீட்டுள்ள உறவினர்கள், அந்தக் கொடூர தம்பதிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
