வங்கதேச மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவுக்குள் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12 அன்று தலையில் சுடப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சூழலில், துப்பாக்கியால் சுட்ட ஃபைசல் கரீம் மசூத் மற்றும் அவரது கூட்டாளி ஆலம்கீர் ஷேக் ஆகிய இருவரும் மேகாலயா எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக வங்கதேச காவல்துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு உதவி செய்த இரு இந்தியர்களை இந்திய அதிகாரிகள் பிடித்துள்ளதாகவும் வங்கதேச கமிஷனர் நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

​இருப்பினும், வங்கதேசத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியப் பாதுகாப்புப் படைகள் முற்றிலும் மறுத்துள்ளன. எல்லையைத் தாண்டி யாரும் ஊடுருவியதற்கான எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை என்று எல்லை பாதுகாப்புப் படை (BSF) ஐ.ஜி. ஓ.பி. உபாத்யாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், குற்றவாளிகளுக்கு உதவியதாக இந்தியர்கள் யாரையும் தாங்கள் கைது செய்யவில்லை என்று மேகாலயா மாநில டி.ஜி.பி. தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே ஒருவிதமான பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.