நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை பத்மா, கோபி என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக தனது கணவர் லட்சுமன் நாயக்கை கொலை செய்துள்ளார். இவர்களது தொடர்பை கணவர் கண்டித்ததால் ஆத்திரமடைந்த பத்மா, தனது காதலன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த லட்சுமன் நாயக்கின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் எதுவும் தெரியாதது போல் மது குடித்து அவர் இறந்ததாக நாடகமாடியுள்ளனர். லட்சுமன் நாயக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பத்மா தனது கள்ளக்காதலன் கோபி, அவரது தாய், தங்கை மற்றும் சகோதரருடன் சேர்ந்து இந்த கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டிய ஆசிரியையே கள்ளக்காதலுக்காக கணவரைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
