உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவரை மனைவியே தனது காதலனுடன் சேர்ந்து சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜான்பூரைச் சேர்ந்த சதாம் அலி என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சவிதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, மிர்சாபூரில் உள்ள காசிராம் குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்.

அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சதாம் அலியின் உறவினரான அற்பாஸ் என்பவர் இவர்களுடன் தங்க வந்தபோது, அவருக்கும் சவிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது தெரிந்ததும் அற்பாஸை வீட்டை விட்டு சதாம் அலி வெளியேற்றினார்.

இருப்பினும், இருவரும் ரகசியமாகப் பழகி வந்ததோடு, தங்களுக்குத் தடையாக இருந்த சதாம் அலியைத் தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டினர். சம்பவத்தன்று இரவு, சவிதாவும் அற்பாஸும் வீட்டில் ஒன்றாக இருந்ததை சதாம் அலி பார்த்துவிட்டதால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அற்பாஸ் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சதாம் அலியைச் சுட்டார்.

அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததும், அது கொலையெனத் தெரியாமல் மறைக்க சவிதா காயத்தின் மேல் பஞ்சு வைத்து ரத்தத்தைத் துடைத்துவிட்டு, மின்சாரம் தாக்கியதால் அவர் விழுந்துவிட்டதாக நாடகமாடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்தது. தற்போது சவிதா மற்றும் அற்பாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.