அதிமுகவில் ஓ.பி.எஸ்-ஐ மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், “கூட்டணியில் யாரைச் சேர்க்கலாம், யாரைத் தவிர்க்கலாம் என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்” என்று தெளிவாகக் குறிப்பிட்டார். “இப்போது ஒரு வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறதே?” என்ற செய்தியாளர்களின் துருவித் துருவிய கேள்விக்கு, “அரசியலில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும், அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது; நான்கு சுவர்களுக்குள் பல விஷயங்கள் நடக்கும்” என்று ரகசியமான பாணியில் பதிலளித்தார்.
மேலும், அனைத்தையும் இப்போதே வெளிப்படையாகக் கூற முடியாது என்றும், சரியான நேரம் வரும்போது தேவையான தகவல்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜெயக்குமாரின் இந்த “நான்கு சுவர்களுக்குள் நடக்கும் ரகசியம்” குறித்த பேச்சு, அதிமுக மற்றும் ஓ.பி.எஸ் அணிகள் இடையே திரைமறைவில் ஏதேனும் பேச்சுவார்த்தை நடக்கிறதோ என்கிற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது.
