வங்கதேசத்தின் ராஜ்பரி மற்றும் மைமன்சிங் மாவட்டங்களில் ஒரே வாரத்தில் இரண்டு இந்துக்கள் கும்பல் வன்முறையால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு ராஜ்பரி மாவட்டம் பண்சா பகுதியில், 29 வயதான அம்ரித் மண்டல் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

‘சாம்ராட்’ என்று அழைக்கப்படும் இவர், அப்பகுதியில் ஒரு குற்றக்கும்பலை நடத்தி வந்ததாகவும், கிராமவாசி ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியபோது திருடன் என நினைத்து பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இது ஒரு மத ரீதியான மோதல் அல்ல என்றும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர் மீதான மக்களின் கோபத்தால் நிகழ்ந்த வன்முறை என்றும் வங்கதேச இடைக்கால அரசு விளக்கம் அளித்துள்ளது. இதற்கு முன்னதாக, டிசம்பர் 18 அன்று மைமன்சிங் நகரில் திபு சந்திர தாஸ் என்ற 25 வயது இளைஞர் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் மரத்தில் தொங்கவிடப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அவர், இஸ்லாம் மதத்திற்கு எதிராகப் பேசியதாகக் கிளம்பிய வதந்தியால் இந்தக் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தொடர் படுகொலைகள் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரிடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.