தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, “திமுக இன்னும் தனது தோல்விக்கான காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை; அடுத்த 8 மாதங்களில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 25 மாநகராட்சிகளில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது திமுக ஜெயித்துக் காட்டட்டும். தைரியம், தில் இருந்தால் எங்களோடு மோதிப் பாருங்கள்” என ஓப்பனாக சவால் விட்டிருந்தார்.

இதற்குச் சென்னை அறிவாலயத்தில் வைத்து பதிலடி கொடுத்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. முதல்வர் ஸ்டாலினுக்கோ அல்லது உதயநிதிக்கோ சவால் விட ஆதவ் அர்ஜுனுக்கு எந்தவொரு அரசியல் தகுதியும் இல்லை என்று சாடிய அவர், வரலாறு தெரியாமல் ஆதவ் அர்ஜுனா பேசி வருவதாகக் கொந்தளித்தார்.

மேலும், தவெக-விற்கு அதிரடியான சவால் ஒன்றை விடுத்துள்ள ஆர்.எஸ்.பாரதி, “தமிழகத்தின் மாபெரும் தலைவரான எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று, நேரடியாகப் பிரச்சாரத்திற்கே வராமல் வென்ற 1984 தேர்தலுக்குப் பிறகு, 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 102 நகராட்சிகளில் 90-ஐ திமுக கூட்டணி தட்டித் தூக்கியதுதான் வரலாறு. அப்போது அது சட்டமன்றத் தேர்தலுக்கு இணையான நேரடித் தேர்தல்” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் சவால் விடுகிறேன்… ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில், அதாவது ஜனவரி மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துங்கள். அதில் ஒரே ஒரு மேயர் பதவியையாவது TVK  வென்று காட்டினால், நான் எனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்! இந்தச் சவாலை ஏற்கத் தயாரா?” என அதிரடி காட்டினார். மேலும், ஏதோ ஒரு அலையிலும், குடும்பத்தினர் வற்புறுத்தலாலும் மக்கள் வாக்களித்ததால் தான் தவெக-வில் 107 பேர் வென்றுள்ளார்களே தவிர, அது நிலையானது அல்ல என்றும் ஆர்.எஸ்.பாரதி வெளுத்து வாங்கியுள்ளார்.