மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தின் காரத் நகரில், நெஞ்சை உலுக்கும் கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தானே மாவட்டம் ஷஹாப்பூரில் பொறியாளராக பணியாற்றி வந்த லக்ஷ்மண் மண்டலே என்பவர், சொகுசு கார் ஒன்றால் மோதி, கொடூரமான முறையில் நசுக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண சாலை விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தனர்.
ஆனால், காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அது திட்டமிட்ட படுகொலை என்பது வெளிச்சத்திற்கு வந்தது. குடும்பத் தகராறு காரணமாக, லக்ஷ்மண் மண்டலேயின் மனைவியும் அவரது மைத்துனரும் (மனைவியின் தம்பி) சேர்ந்து கூலிப்படையை ஏவி இந்த கொடூரக் கொலையைச் செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ठाण्यातील एका अभियंत्याची कराडमध्ये कारखाली चिरडून हत्या pic.twitter.com/3sIUKB2VFh
— Ravindra Mane (@i_am_Ravindra1) June 7, 2026
சனிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் லக்ஷ்மண் மண்டலே தனது வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் அவர் மீது பலத்த வேகத்தில் மோதியது. சிசிடிவி காட்சிகளின்படி, கார் டிரைவர் லக்ஷ்மண் மீது மோதியதுடன் நிறுத்தாமல், காரை பின்னோக்கி எடுத்து மீண்டும் அவர் மீது ஏற்றியுள்ளார். அதோடு விடாமல், மூன்றாவது முறையாகவும் காரை அவர் மீது ஏற்றி கொடூரமாகக் கொன்றுள்ளார்.
பின்னர் காரில் இருந்து இறங்கிய கொலையாளி, லக்ஷ்மண் வைத்திருந்த பேக் ஒன்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இந்த அதிர்ச்சி வீடியோ வெளியான 12 மணி நேரத்திற்குள் போலீசார் கொலையாளிகளின் நெட்வொர்க்கை உடைத்தனர். கூலிப்படையை ஏவிய லக்ஷ்மணின் மனைவி மற்றும் மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். காரை ஏற்றி கொலை செய்த முக்கிய கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர வேட்டை நடந்து வருகிறது.
