கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவருடன் துணை முதல்வர் மற்றும் 12 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில், மூத்த அமைச்சரான ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தி அடைந்தார். தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, பதவியேற்ற இரண்டாவது நாளிலேயே (நேற்று முன்தினம்) தனது அமைச்சர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். புதிய அரசு அமைந்த உடனே மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தது முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ராமலிங்க ரெட்டியைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்வர் தீவிரமாக இறங்கினார். அவரோடு இரண்டு முறை தொலைபேசியில் பேசியதுடன், ராஜினாமா கடிதத்தை உடனடியாகத் திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தினார். மேலும், முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் இந்த விவகாரத்தில் தலையிட்டு ராமலிங்க ரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவும் அவரோடு ஒரு மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த உச்சக்கட்ட அரசியல் பரபரப்புகளுக்கு இடையே, பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் டி.கே.சிவகுமார் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமலிங்க ரெட்டி என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவருக்கும் அரசுக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் அனைத்தும் பேசி சுமுகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டது.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை எனக்கு வாட்ஸ்அப் மூலமாகத்தான் அனுப்பியிருந்தார். தற்போது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அந்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவரே கூறிவிட்டார். எனவே, இந்த விவகாரத்தை யாரும் பெரிதுபடுத்த வேண்டாம்; தேவையில்லாத புதிய கதைகளை உருவாக்கி அரசுக்கு யாரும் நெருக்கடி கொடுக்க வேண்டாம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கர்நாடக காங்கிரஸில் வெடித்த 2 நாள் ராஜினாமா நாடகம் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.
