மத்தியப் பிரதேசத்தில், ஒரே ஒரு தெரு நாய் வெறும் 10 மணி நேரத்தில் அடுத்தடுத்து 42 பேரைக் கடித்துக் குதறி ஒட்டுமொத்த நகரையும் பய பீதியில் ஆழ்த்தியுள்ளது.
முதலில் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த அந்த நாய், அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களைத் வெறித்தனமாகத் தாக்கியுள்ளது.
பின்னர் அங்கிருந்து தப்பித்து சன்வர் சாலை, பரதாரி உள்ளிட்ட பொது இடங்களுக்குச் சென்று கண்ணில் பட்ட பாதசாரிகளையெல்லாம் கடித்துக் குதறியுள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த 16 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக ஒரு நாளைக்கு 200 நாய்க்கடி சம்பவங்கள் பதிவானாலும், ஒரே நாய் இவ்வளவு குறுகிய நேரத்தில் 42 பேரைக் கடித்தது இதுவே முதல்முறை என்பதால் மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் அலர்ட் ஆகியுள்ளன.
கைகளில் தடிகளுடன் பொதுமக்கள் வீதியில் இறங்கித் தேடியும், நள்ளிரவு வரை அந்த வெறி நாய் மீட்புக் குழுவினரிடம் சிக்காமல் மர்மமாகத் தலைமறைவாக இருப்பது அப்பகுதி மக்களைக் கடுமையான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
