தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் மிர்யாலகூடா பகுதியில் வசித்து வந்த ஏழைத் தம்பதியினருக்கு, வயதான காலத்தில் தங்களின் சொந்த மகனாலேயே வீட்டை விட்டு துரத்தப்பட்ட கொடுமை அரங்கேறியுள்ளது. திருமணமான மகனுடன் ஒரே சிறிய வீட்டில் வசித்து வந்த அந்தப் பெற்றோரை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தப் பாசமில்லாத மகன் வீட்டை விட்டு இரக்கமின்றி வெளியேற்றியுள்ளார்.
தங்குவதற்கு இடமின்றி தவித்த அந்த முதியவர்களுக்கு உறவினர்கள் சிலர் தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துக் காப்பாற்றினர். இதையடுத்து, தங்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து நல்கொண்டா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரிடம் அந்தப் பெற்றோர் கண்ணீருடன் புகார் அளித்தனர்.
முதியவர்களின் புகாரைப் படித்துப் பார்த்துப் ஆவேசமடைந்த மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர், உடனடியாக அதிரடி ஆக்ஷனில் இறங்கினார். வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அந்த முதியவர்களின் வீட்டுக்கு அதிரடியாக அனுப்பி வைத்தார். அங்கு சென்ற அதிகாரிகள், “வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்தியது ‘பெற்றோர் நல்வாழ்வுச் சட்டம்-2007’-ன் படி மாபெரும் குற்றச் செயல். எனவே, இனி இந்த வீட்டில் வசிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை” என்று கூறி, அந்தப் மகனை வீட்டை விட்டு வெளியேற்றினர்.
அத்துடன் நில்லாமல், பாதிக்கப்பட்ட பெற்றோரை மீண்டும் அதே வீட்டிற்குள் மாஸாக அழைத்துச் சென்று அமர வைத்த அதிகாரிகள், அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பையும் வழங்கினர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்கள், முதியவர்களின் கண்ணீரைத் துடைத்த நல்கொண்டா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரின் அதிரடி நடவடிக்கையை சமூக வலைத்தளங்களில் சிங்கம்போல பாராட்டித் தீர்த்து வருகின்றனர்.
