ஹரியானா மாநிலம் குருகிராமின் பான்ஸ் அலியார் கிராமத்தில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே அவளைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 37 வயதான நரேந்திர சிங் மற்றும் அவரது மனைவி காஜல் தேவி (36) ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து கொண்டு, தங்கள் 4 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
நரேந்திர சிங் தனது மனைவியின் நடத்தையில் தொடர்ந்து சந்தேகம் அடைந்து வந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று புதன்கிழமை நள்ளிரவு நரேந்திர சிங் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, காஜல் தேவி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர சிங் உடனடியாக போனை தருமாறு கேட்க, காஜல் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் வெடித்துள்ளது.
கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நரேந்திர சிங், வீட்டில் இருந்த ஸ்கார்ஃப்பை எடுத்து காஜல் தேவியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். இந்த பயங்கர விபரீதம் நடந்தபோது இவர்களது 4 குழந்தைகளும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததால், கீழே நடந்த இந்த கொடூரக் கொலை குறித்து அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை. மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய நரேந்திர சிங்கை, காஜலின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடியாகக் கைது செய்தனர்.
பலியான காஜலின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கொலையாளி நரேந்திர சிங்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நள்ளிரவில் நடந்த இந்த பயங்கரக் கொலைச் சம்பவம் குருகிராமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
