பொதுவாகப் பெண்கள் பாதுகாப்பு குறித்து உலகம் முழுவதும் அதிக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், வளர்ந்த நாடான அமெரிக்காவில் ஆண்கள் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் குடும்ப வன்முறைகளை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாகப் பாதிப்பை அனுபவித்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆண்கள் அழக்கூடாது’, ‘ஆண்கள் பலமானவர்கள்’ என்ற சமூகத்தின் தவறான பிம்பத்தாலும், தங்களின் ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற பயத்தினாலும் பாதிக்கப்பட்ட ஆண்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் மட்டுமே காவல்நிலையத்தில் புகார் அளிக்கின்றனர்.

சமூக அழுத்தங்கள் மற்றும் கேலிக்கு அஞ்சியே பல ஆண்கள் தங்களுக்கு நேரும் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளை மறைக்கின்றனர்.

அமெரிக்கக் காவல்துறை மற்றும் சமூகத்தின் அணுகுமுறை ஆண்களின் புகார்களைச் சரியாகக் கையாள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வன்முறை என்பது யாரால் பாதிக்கப்பட்டாலும் அது வன்முறைதான் என்பதை உணர்ந்து, பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு எனத் தனிப்பட்ட உதவி மையங்கள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவுக் குழுக்களின் தேவை இன்று கட்டாயமாகியுள்ளது.

SAVE போன்ற சில அமைப்புகள் ஆண்களின் பாதுகாப்புக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பெண்களுக்கான பாதுகாப்புத் திட்டங்களுக்கு இணையாக, பாதிக்கப்பட்ட ஆண்களின் துயரத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான சட்ட மற்றும் சமூக ஆதரவை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.