சிறுவர்கள் ஆபாச இணையதளங்களைப் பார்ப்பதைத் தடுக்க 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய அரசுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 16 வயதுக்கும் குறைவானவர்கள் குறிப்பிட்ட இணையதளங்களைப் பயன்படுத்தத் தடை இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இந்தியாவிலும் இது போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. எஸ்.விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் இந்த அதிரடி கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
முறையான தடைச் சட்டம் அமலுக்கு வரும் வரை, இணையதளப் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துச் சிறுவர்களிடையே மத்திய மற்றும் மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இணைய உலகில் சிறுவர்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
