2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் மீனவக் கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள், உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதிகாலையிலேயே கடற்கரையில் திரண்ட நூற்றுக்கணக்கான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள், உயிரிழந்த தங்கள் உறவினர்களின் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, கடலில் பால் ஊற்றியும், பூக்களைத் தூவியும் தங்களது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர். 21 ஆண்டுகள் கடந்த பின்னரும், அந்தப் பயங்கரமான ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட இழப்புகள் இன்றும் அந்த மக்களின் மனதில் ஆறாத வடுவாகவே உள்ளது. புதுப்பட்டினம் மட்டுமல்லாது தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடலோரப் பகுதிகளும் இன்று சோகத்தில் மூழ்கியுள்ளன.
