நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தில் மது போதை ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. மருந்தகம் நடத்தி வரும் இலக்கியா என்பவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதன்ராஜ் என்பவர் காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், குடிக்கப் பணம் கேட்டுத் தொடர்ந்து தனது மனைவியை வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த மதன்ராஜ் தனது மனைவியைத் துரத்திச் சென்று அரிவாளால் அவரது வலது கையைத் துண்டித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கையை வெட்டியதோடு நில்லாமல், துண்டிக்கப்பட்ட அந்தக் கையை எடுத்துக் கொண்டு ஓடிய மதன்ராஜ், அதனை அருகே இருந்த ஒரு குளத்தில் வீசி எறிந்துள்ளார்.

வலியால் அலறித் துடித்த இலக்கியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பலத்த காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீஸார், குளத்தில் வீசப்பட்ட கையைத் தேடி எடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த மதன்ராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.