கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர், ரெயிலில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஷேக் முகமது என்பவர், அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்தார். அப்போது அதே ரெயிலில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனை அந்த மாணவி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, ரெயில்வே போலீசாருக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் வந்தபோது, ரெயில்வே போலீசார் காவலர் ஷேக் முகமதுவை ரெயிலிலிருந்து கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், காவலர் ஷேக் முகமதுவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
