சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், 7 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளி ஒருவருக்கு, 14 வயதில் ஒரு மகள் உள்ளார். பாதுகாப்பாக இருக்க வேண்டிய தந்தையே, தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் விளைவாக அந்தச் சிறுமி 7 மாத கர்ப்பமானது.
இந்த விவரம் வெளியில் தெரியவந்ததையடுத்து, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நான்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, குற்றவாளியான அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணையை, அப்போது நான்குநேரி பகுதி உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய டாக்டர் பிரசன்ன குமார் (தற்போது திருநெல்வேலி மாநகர துணை ஆணையாளர்) தலைமையிலான குழுவினர் தீவிரமாக முன்னெடுத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வழிகாட்டுதலின்படி, நான்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் குறுகிய காலத்திலேயே தேவையான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி, பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வலுவான வாதங்களை முன்வைத்தார்.
7 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில், இன்று மதியம் 12 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே இத்தகைய கொடூர குற்றத்தில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத சமூகக் குற்றம் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
தண்டனை விவரங்கள்:
குற்றவாளிக்கு தூக்கு தண்டனை (மரண தண்டனை)
ரூ.25,000 அபராதம்
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
குற்றம் நடந்த 7 மாதங்களுக்குள் குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் துறையினருக்கும், அரசு வழக்கறிஞருக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இந்த தீர்ப்பு கடும் எச்சரிக்கையாக அமையும் என சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
