உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அரங்கேறிய கொடூர கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு போக்சோ நீதிமன்றம் திங்கள்கிழமை அதிரடி தீர்ப்பளித்தது.
கடந்த 2016 ஜூலை மாதம் நொய்டாவிலிருந்து ஷாஜஹான்பூர் நோக்கி காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை வழிமறித்த பாவாரியா கொள்ளை கும்பல், துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று வயல்வெளியில் வைத்து தாய் மற்றும் அவரது 14 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடித்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஜுபைர், முகமது சாஜித், தரம்வீர், நரேஷ் மற்றும் சுனில் ஆகிய 5 பேருக்கும் இயற்கை மரணம் எய்தும் வரை சிறையிலிருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு நீதிபதி ஓ.பி. வர்மா வழங்கிய இந்த தீர்ப்பில், குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் தலா ₹1.81 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது; இந்த தொகையில் பாதி பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சலீம் பாவாரியா விசாரணையின் போதே சிறையில் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். டிஎன்ஏ பரிசோதனை மற்றும் 25 சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடிப்படையில் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்த போதிலும், ஒன்பது ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்த நீதியை ஒரு முக்கிய மைல்கல்லாக அவர்கள் கருதுகின்றனர்.
