குருகிராமில் 15 வயதேயான 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, தற்போது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், 34 வயதான ராஜேஷ் என்ற நபர் அந்தச் சிறுமியைப் பலமுறை சீரழித்துள்ளார். தான் செய்த செயலால் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்திருக்கலாம் என்பதை உணர்ந்த ராஜேஷ், பிப்ரவரி மாதமே தனது வாடகை வீட்டை காலி செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். மிரட்டலுக்குப் பயந்து இந்த விவகாரத்தை யாரிடமும் சொல்லாமல் அந்தச் சிறுமி மறைத்து வந்துள்ளார்.

​மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுமி பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் வரை, அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கும் தெரியவில்லை, அவரது குடும்பத்தினருக்கும் தெரியவில்லை. கர்ப்ப காலத்திலும் அந்தச் சிறுமி தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். தற்போது புகாரின் அடிப்படையில் ராஜேஷைக் கைது செய்துள்ள போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் குழந்தைகள் நலக் குழு மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.