உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில் உள்ள டெல்லி – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில், ரயில்வே மேம்பாலத்தின் இரும்புச் சட்டங்களைப் பிடித்துத் தொங்கியபடி இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் உடற்பயிற்சி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அதிவேகமாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் நெடுஞ்சாலைக்கு மேலே எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அந்த இளைஞர் அந்தரத்தில் தொங்கியபடி தண்டால் எடுக்கும் சாகசத்தில் ஈடுபடுகிறார்.

 

வெறும் சமூக வலைதளப் பக்கங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்ற நோக்கில், தனது உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த இந்தச் செயல் அங்கிருந்த வாகன ஓட்டிகளைத் திகைக்க வைத்தது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த இளைஞரை அடையாளம் காணும் பணியில் ஹாபூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவரை அடையாளம் கண்டவுடன் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் சிறுவன் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு ரெயில் மேலே செல்லும்போது சாகசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த நெடுஞ்சாலைச் சாகசமும் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று போலீசார் இளைஞர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.