சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாரிசு அரசியல் குறித்து மேடைகளில் முழங்குபவர்களை நோக்கி கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். இன்றைய அரசியல் களத்தில் வாரிசு அரசியல் மற்றும் மன்னராட்சி என்று பேசுபவர்கள் தங்களது பக்கத்தில் இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வாரிசு அரசியலின் தோற்றுவாயும் அதன் பிறப்பிடமுமே காங்கிரஸ் கட்சிதான் என்று அதிரடியாகக் குற்றம் சாட்டினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி என்ன புதிதாக வந்த ஏழை எளிய மகனா என்று கேள்வி எழுப்பிய சீமான், வாரிசு அரசியலின் முன்னோடியே காங்கிரஸ் தான் என்று மிகக் காட்டமாக வறுத்தெடுத்தார். ​மேலும், தேர்தல் முடிவதற்கு முதல் நாள் வரை ‘தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலின் போய் மோடி மற்றும் அமித்ஷா காலில் விழுவார்’ என்று பேசியவர்கள், இன்று தேர்தல் முடிந்து இரண்டு வாரத்திற்குள் தாங்களே டெல்லிக்கு ஓடிப் போய் விழுந்து கிடக்கிறார்கள் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாட்டின் நலனுக்காக இவ்வளவு காலம் போராடித் தடுத்து வைத்திருந்த ஜல் ஜீவன் குடிநீர்த் திட்டம், ஒலிவியா பெட்ரோல் நிறுவனம் அத்தனையையும் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வர இவர்களே டெல்லிக்குச் சென்று கையெழுத்துப் போட்டுவிட்டார்கள் என்று சீமான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சீமானின் இந்த அதிரடிப் பேச்சு ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.