தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் நிர்வாகத்தில் கடந்த காலங்களில் நடந்த ரூ.3600 கோடி இமாலய ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த கால ஆட்சிகளில் ஒரு நாளைக்கு ஒரு கோடி மதுபான பாட்டில்கள் விற்கப்பட்ட நிலையில், ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து, மாதத்திற்கு 300 கோடி வீதம், ஆண்டிற்கு 3,600 கோடி ரூபாய் வரை மெகா ஊழல் நடந்துள்ளதாக அதிரடி புள்ளிவிவரங்களை உடைத்தார்.
இவ்வளவு காலம் இந்த ஆயிரம் கணக்கான கோடி ரூபாய் பணம் தனிநபர்கள், தனிக்கட்சிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கைகளுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், இனி ஒரு பைசா கூட திருட முடியாது என்று எச்சரித்துள்ளார். முதலமைச்சர் தளபதி விஜய்யின் உத்தரவின்படி நேற்று (ஜூன் 5) வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை மூலம், இனி அந்தப் பணம் அனைத்தும் நேரடியாக அரசு கஜானாவிற்கு மட்டுமே வரும் என்றும், அது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்ன செய்துவிட்டீர்கள்?” என்று கேட்பவர்களுக்கு, மாதம் 1,200 கோடியை அரசு கஜானாவிற்கு கொண்டு வந்து காட்டியுள்ளோம் என்பதே தவெக அரசின் அதிரடி பதில் என்றார். தவெக ஆட்சியில் யார் தப்பு செய்தாலும், அது அமைச்சராக இருக்கும் நானாகவே இருந்தாலும் முதலமைச்சர் விஜய் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பார் என்றும், இனி டாஸ்மாக் மட்டுமல்ல எந்தத் துறையிலும் ஊழல் இருக்காது என்றும் அமைச்சர் விக்னேஷ் விடுத்துள்ள சவால் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
