அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் கூட சில முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து விலகி, தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர். இது அதிமுகவிற்குப் பின்னடைவு ஏற்படுகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தனது கடுமையான கண்டனத்தை பொதுவெளியில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுக என்ற ஆலமரத்தை யாராலும் அசைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொண்டர்கள் உறுதியாக இருக்கிறார்கள். கட்சியை விட்டு வெளியேறும் சில முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் வெறும் பணத்துக்காகவும் பதவி ஆசைக்காகவுமே அங்கும் இங்கும் அலைந்து திரிகிறார்கள். இத்தகைய சுயநலவாதிகள் வெளியேறுவதால் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. உண்மையான, விசுவாசமான தொண்டர்கள் எப்போதும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் மட்டுமே அணிவகுத்து நிற்பார்கள்” என்று மிக ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளார். பொன்னையனின் இந்த காரசாரமான பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.