உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம், காகா காவல் எல்லைக்குட்பட்ட தூமன்கஞ்ச் பகுதியில் நடுரோட்டில் பெண் ஒருவரும், முதியவர் ஒருவரும் ஒருவரையொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு மிகக் கொடூரமாகத் தாக்கி மல்லுக்கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களுக்குச் சிறிதும் அஞ்சாமல், இருவரும் சாலையில் உருண்டு பிரண்டு சண்டையிட்டுக் கொண்டபோது, அங்கிருந்தவர்கள் அதனை விலக்க முயலாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது வீடியோவில் பதிவாகியுள்ளது.

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2Fsainvsandes%2Fstatus%2F2002022134064054684&widget=Video

இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியதும், இது குறித்து எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.

இதற்குப் பதிலளித்துள்ள பதேபூர் காவல்துறை, இச்சம்பவம் தொடர்பாக காகா காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமான புகார் பெறப்பட்டு, உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்தி வரும் போலீசார், சம்பந்தப்பட்ட இருவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.